15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கை தமிழகத்திற்கு சாதகமானதா?
இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை மத்திய அரசு பெறுகிறது; ஆனால், பெருமளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும். ஆகவே, மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது.
மேலும் மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இதைச் செய்வதற்காகத்தான் நிதிக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து இருக்கிறது.
14வது நிதி குழுவின் காலம் 2020 ஆண்டோடு முடிவடையும் நிலையில், 15வது நிதி குழு என்.கே. சிங்கைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதி குழு 2020-21ஆம் ஆண்டுக்கான இடைக்கால பரிந்துரைகளை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது. இறுதி அறிக்கை, அதாவது 2021-26ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள் இந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.