எந்தவொரு உணவு சம்பந்தப்பட்ட நிறுவனமும் உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். உணவு சார் சிறு குறு தொழில்கள்கூட இந்த லைசென்ஸ் பெற்று வியாபாரத்தை நடத்துகின்றன. அப்படி இருக்கும்போது செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்களும் தங்களின் லைசென்ஸ் பற்றி மக்களிடம் எடுத்துரைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் இல்லை என்பதை இங்கே தெளிவாக காணமுடிகிறது
பெரும்பாலும் குடும்பத்தொழில், சிறு தொழில் எனச் செய்வதால் செக்கு எண்ணெய் தயாரிப்பு சுகாதாரமில்லாத இடங்களில் தயாரிக்கப்படுவதை பார்க்க இயலுகிறது. மேலும், எண்ணெய் வித்துக்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் பெரிய நிறுவனமாக அல்லாமல், குறு நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் செக்கு எண்ணெய் வித்து, வேலையாள் கூலி போன்றவற்றைச் சமாளிக்க பாமாயில் போன்ற மலிவு விலை எண்ணெய்களைக் கலக்க வாய்ப்பிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இது தவிர இயற்கை, ஆரோக்கியம் எனப் பேசும் நாம் செக்கு எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் யாவும் இயற்கையாய் விளைந்தவையா என்பதை உறுதி செய்யத் தவறுகிறோம் என்பதை 21% பேர் அமோதிக்கின்றனர்.